Tuesday, March 31, 2020

கல்முனை முஸ்லிம் பிரதேசத்தில் 102 பேர் தனிமைப்படுத்தல்
___________________________________

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  முஸ்லிம் பிரதேசங்களான கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை பிரதேசங்களில் வெளி நாடுகளிலிருந்து நாடு திரும்பிய 102 பேர் தனிமைப்படுத்தி பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்து நேற்று வரை 14 நாட்கள் தனிமைப் படுத்தலிலிருந்து 100 பேர் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். மேலும் 02 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து நாளை குடும்பத்தாருடன் இணைத்துக் கொள்ளப் படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்

கல்முனை வர்த்தக சங்கத்தினால் தெளிகருவிகள் அன்பளிப்பு

கல்முனை வர்த்தக சங்கத்தினால்  தெளிகருவிகள் அன்பளிப்பு

=========================

கல்முனை வர்த்தக சங்கத்தினால் இராணுவத்திற்கு தேவையான
மூன்று தெளிகருவிகளை (sprayers) இன்று (31) செவ்வாய்க்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டது.

கல்முனை பிராந்திய இராணுவ பொறுப்பதிகாரியிடமே இந்த  தெளிகருவிகள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கல்முனை வர்த்தக சங்க தலைவர் கே.எம்.சித்தீக், செயலாளர் எஸ். ஹமீட்,  சிரேஷ்ட உறுப்பினர் எஸ்.எம். ஜின்னா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கல்முனை பிராந்திய இராணுவ கட்டுப்பாட்டு பிரிவுக்குள் உள்வருபவர்களையும் வாகனங்களையும் தெளிமருந்து தெளித்து தொற்று நீக்கி உள்வர அனுமதிக்க இராணுவம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இந்த செயற்திட்டத்தினை ஊக்குவிக்கும் முகமாகவே இந்த அன்பளிப்பு கல்முனை வர்த்தக சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் 162 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பில் 162 சிறைக் கைதிகள் பிணையில் விடுவிப்பு
=============================
மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 சிறைக் கைதிகள் நேற்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் . எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்தார்

கோரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைசாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நீதவான்களின் ஆலோசனைகக்கமைய சிறு குற்றம் புரிந்த சிறைக்கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறையைச் சேர்ந்த 21, பேரையும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரையும், கல்முனையைச் சேர்ந்த 12 பேரையும், மட்டக்களப்பைச் சேர்ந் 44 பேரையும் , ஏறாவூரைச் சேர்ந்த 39 பேரையும், வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 19 அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 9 பேரையும் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 162 சிறைக்கைதிகளையும் முதற்கட்டமாக விடுவிக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது
==================================================
எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டம் சில பிரதேசங்களில் நேற்று (30) தளர்த்தப்பட்டு மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. விசேடமாக இவ் ஊரடங்குச் சட்டம் தொற்றுநோயைத் தடுப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். குறித்த ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்திய தினத்திலிருந்து இதுவரை சட்டத்தை மீறியவர்கள் 7000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் 1700 வாகனங்கள் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதுடன், ஆனாலும் தற்போது பொலிஸ் பிணை வழங்கப்படுவதில்லை, அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதுடன் அவர்கள் பயணித்த வாகனம் பொலிஸ் கையகப்படுத்தி நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கப்படும்.

அதுபோலவே, அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய மனிதாபிமான தேவைகளைத் தவிர எந்தவொரு காரணத்திற்கும் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. எந்தவொரு காரணத்தாலும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது.

அத்தியாவசிய விடயங்களுக்காக அனுமதிப்பத்திரம் வழங்கவதாயின் பிராந்திய சுகாதார மருத்துவர் அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் எந்தவொரு காரணத்திற்கும் நீங்கள் வசிக்கும் பிரதேசத்தை விட்டு வெளியே செல்வதற்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது. மிக முக்கிய காரணமாக இருந்தால் சுகாதார மருத்துவ அதிகாரியின் பரிந்துரை அவசியமாகும். அத்தியாவசிய சேவைகளாக சுகாதாரப் பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பணியாளர்கள் கருதப்படுவர்.

ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காகப் பொலிஸ் நிலையங்களால் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை அவர்கள் தங்களுடைய அடையாள அட்டைகளை அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

முக்கியமாக சில சம்பவங்களும் முறைப்பாடுகளும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. அத்தியாவசிய சேவைகளுக்கும் ஏனைய சேவைகளுக்கும் வழங்கும் அனுமதிப்பத்திரங்களை துஷ்பிரயோகம் செய்வதாக அறிய முடிந்தது.

அத்தியாவசிய சேவை வழங்கும் பணியாளர்களைப் போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் மீண்டும் திரும்புகையில் வேறு நபர்களை ஏற்றி வருவதாக அறிய முடிகின்றது. இவ்வாறு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் போதும் மீண்டும் திரும்புகையிலும் இவ்வாறு வேறு நபர்களை ஏற்றிச் செல்வதை தடுப்பதற்காகவும் அவ்வாறானவர்களைக் கைது செய்யவும் குறித்த வாகனத்தை பொலிசாரால் கையகப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்கள் மூலமாகத்தான் இத்தொற்றுப் பரவுவதைத் தொடர்ந்து கூறி வருகின்றோம். ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாம் அவ்வாறானவர்களைத் தனிமை காக்குமாறும் தம்மைப் பதிவு செய்யுமாறும் கூறியிருந்தோம்.

ஆனாலும் இன்னும் சிலர் தனிமைப்படுத்தல் தொடர்பாக பதிவு செய்யப்படாதவர்கள் இருக்கின்னறனர். எந்நாட்டிலிருந்தும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையம் மூடும் வரை இலங்கைக்குள் பிரவேசித்தவர்கள் தம்மை ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்கு முன்னர் தம்மைப் பதிவு செய்து கொள்ளவும். தவறும் பட்சத்தில் அவர்களுடைய பெயர்ப்பட்டியல் குடிவரவு குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளரிடம் பெறப்பட்டு முகவரிகளை ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இணையத்தளங்கள் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. நேற்றைய தினமும் இலங்கையில் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொய்யான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. அவை பொய்யானதாகும். ஆனாலும் அட்டலுகம மற்றும் அக்குறணை பிரதேசங்களைத் தவிர வேறெந்தொரு பிரதேசமும் அவ்வாறு தனிமைப்படுத்தப்படவில்லை.

இன்றைய தினம் (30) அவ்வாறு பொய்யான தகவல்களைப் பரப்பியவர்கள் மூவர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம். அவர்களை அடையாளங் கண்டுள்ளோம். அவர்களை எதிர்காலத்தில் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு பொய்யான தகவல்களைத் தயாரித்தவர்கள் ஐவரைக் கைது செய்துள்ளோம் அவர்களில் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆகவே தங்களுக்கு கொவிட் 19 தொற்றுப் பற்றிய சரியான தகவல்கள் தெரியாவிட்டால், அவை தனிமைப்படுத்தல் செயன்முறைக்குத் தடைகளை ஏற்படுத்தும் வகையில் அவற்றைச் செய்ய வேண்டாம். அதற்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதுபோலவே உங்களுக்கு ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வழங்கியிருப்பது குறித்த வீதியால் மட்டுமே பயணிக்க முடியும். ஏனைய வீதிகளில் பயணித்தால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.

முக்கியமாக தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறில்லாவிட்டால் உங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எவரொருவர் எந்நாட்டிலிருந்த வருகை தந்திருந்து பதிவு செய்யப்படாவிட்டால் துரிதமாக பதிவு செய்யப்படாவிட்டால். தங்களுக்கு அல்லது தாங்கள் தொடர்புகளைப் பேணிய ஒருவருக்கு இந்நோய் தொற்றினால் உங்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கையெடுக்கப்படும். மீண்டும் இலங்கை விமான நிலையத்தாலோ அல்லது துறைமுகத்தாலோ வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்றார்.

Monday, March 30, 2020

31.03.2020பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள மரக்கறிகளுக்கான புதிய விலைகள்!

மரக்கறி கிலோ ஒன்றை விற்க கூடிய அதி கூடிய மொத்த விலை (ரூபாய்களில்)

கரட்                150.00-180
லீக்ஸ்              120.00
போஞ்சி           120.00
கோவா            100.00
பீட்ரூட்            80.00
கறி மிளகாய்   150.00
தக்காளி           100.00
வெண்டிக்காய் 70.00
வாழைக்காய்   70.00
பச்சை மிளகாய் 200.00
கத்தரிக்காய்    100.00
நோகோல்        60.00
பாகற்காய்       100.00
வெங்காயத்தாள் 100.00
பட்டானா        80.00
வெள்ளரிக்காய் 50.00
கார்கின்           50.00
புடலங்காய்     70.00
தேசிக்காய்      150.00
ரேந்த அவரை 70.00
இஞ்சி              150.00
வற்றாளை கிழங்கு 60.00
பீக்கங்காய்      80.00
பயத்தங்காய்   60.00
ராபு கிழங்கு     40.00

மரக்கறி கிலோ ஒன்றை விற்க கூடிய அதி கூடிய சில்லறை விலை

சில்லறை வியாபாரிகள் அனைத்து மரக்கறிகளையும் அதன் மொத்த விலையை விட அதிக பட்சமாக ரூபா  மேலதிகமான விலைக்கு விற்க வேண்டும்.

உதாரணம்: பீட்ரூட்டுக்கான அதி கூடிய சில்லறை விலை : 80+40 =  ரூபா120.00

அதற்கு ஏற்ப இதன் பின்னரும் மரக்கறிகளை மேற்குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கும்.

துரித இலக்கம்: 1977

Thanks to government Sri Lanka

உதிரம் கொடுக்கும் இலங்கை இராணுவம்.

உதிரம் கொடுக்கும் இலங்கை இராணுவம்.



பிரச்சினை களில் இருந்து மீள, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மிக முக்கியமான ஆலோசனைகள்,

பிரச்சினை களில் இருந்து மீள, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மிக முக்கியமான ஆலோசனைகள்,


அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிகம் கல்முனை மாநகருக்கு வருகை.

அம்பாறை மாவட்டத்தில்
ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அதிகம் கல்முனை மாநகருக்கு வருகை.
=================

(எம்.என்.எம்.அப்ராஸ்)

அம்பாறை மாவட்டத்தில்
இன்று-(2020-03-30 )அதிகாலை 6.00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில்
கல்முனை மாநகர் எல்லை பகுதியில் சுகாதார அறிவுறுத்தலுக்கமைய
மக்கள் அதிகம் நடமாடுவதை கட்டு படுத்தும் முகமாக மாநகரப் பிரதேசத்தில் உள்ள கல்முனை பொது சந்தை மற்றும் சில வியாபாரம் நிலையங்கள்இன்று(30 )மூடப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

கல்முனை நகருக்கு அதிகளவில்   பொது மக்கள் இன்று
 வருகை தந்திருந்தனர். கல்முனை பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்து பொலிசார் சீர் செய்வதை அவதானிக்க கூடியதாகவிருந்து .

இதேவேளை சில சூபர் மார்கட் திறந்த நிலையில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்கள்
கொள்வனவில்ஈடுபட்டனர்.
வங்கிளில் பொது மக்கள் வரிசையில் நின்று சேவையினை பெற்று சென்றனர், மேலும் உள்ளக வீதிகளில் மரக்கறி, மீன்கள் என்பன விற்பனை
இடம்பெற்றதுடன்

இதேவேளை கடற்றொழிலில் ஈடுபடும் கரைவலை மீன்பிடிநடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தனர்.குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில்
ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு அதிகளவான வலையா வகை
மீன்கள் அகப்பட்டதுடன், கல்முனை ,சாய்ந்தமருது,
மாளிகைக்காடு பகுதிகளில்
இவ் வகை மீன்கள் ஓர் கிலோ 200 ரூபா தொடக்கம் 250 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

கோரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த சனிக்கிழமை(28) கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.ரக்கிப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொது சந்தை மற்றும் வியாபாரம் நிலையங்கள் என்பன மூடப்பட வேண்டுமென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.





ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு பிற்பகல் 2.00க்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம்

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு பிற்பகல் 2.00க்கு பின்னர் மீண்டும் ஊரடங்கு சட்டம்
==============================================

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் குறித்த மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு களுத்துறை புத்தளம் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தவிர்ந்த நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பிரதேசங்களில் அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய விடயங்களுக்காக மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது.

அநேகமான பிரதேசத்தில் மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து நகரங்களில் நடந்து கொண்டமை காணக் கூடியதாய் இருந்தது.

எவ்வாறாயினும் சில பிரதேசங்களில் பொது மக்களின் நடவடிக்கைகள் சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக இருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் பொது மக்கள் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களில் திரண்டு இருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட போதும் பதுளை மாவட்டத்தின் வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ஆகிய பிரதேசங்களில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டிருந்தார்.

பண்டாரவளை நகரில் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த பிரதேசங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!
============================================

நேற்றைய தினம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் 5 பேர் சிலாபத்தை சேர்ந்த ஒரே குடும்பைத்தை சேர்ந்தவர்கள் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவர்களில் 4 மாத வயதுடைய கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்

இதேவேளை, கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.

அதன்படி, 14 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தற்போது , அங்கொடை ஐடிஎச், வெலிகந்த மற்றும் மின்னேரியா ஆகிய வைத்தியசாலைகளில் 107 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நாட்டின் பல வைத்தியசாலைகளில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் 104 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டாவது மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இரண்டாவது மரணம்
===========================================
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டத்தில் 7 விடயங்கள் தொடர்பில் கவனம்

ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டத்தில் 7 விடயங்கள் தொடர்பில் கவனம்
=============================================
அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் விசேட கூட்டமொன்று அலரி மாளிகையில் இன்று (30) இடம்பெற்றது.

நாட்டில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் இதன்போது முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதோடு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்படி பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

* கையில் பணமிருந்தும் உணவு உட்பட அத்தியாவசிய சேவைகள் இன்னும் கிடைக்கப் பெறாதவர்களுக்கு அவற்றை வழங்கும் தற்போதுள்ள நடைமுறையில் மீளாய்வு.

* மருந்துகளை விநியோகித்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய திட்டம் குறித்த கவனம்.

* கையில் பணம் இல்லாத ஆனால் வங்கிகளில் பணத்தை கொண்டிருப்போர் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான உத்திகள்.

* சமூர்த்தி பயனாளிகளுக்கான 5000 ரூபாய் கொடுப்பனவை 2020-03- 31 க்கு முன்னர் பூர்த்தி செய்தல்.

* கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக தொழில்களை இழந்து அரசாங்கத்தின் உதவி பட்டியலில் சேர்க்கப்படாதோருக்கான நிவாரண வழிமுறைகள்.

* உணவு பொருட்களின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் அவசியமும் அரிசி, மரக்கறிகள், மீன், கோழி இறைச்சி ஆகியவற்றில் அடுத்த பருவத்தில் தன்னிறைவை அடைதலும்.

* விலங்கு உணவுகளின் விநியோகத்தையும் போக்குவரத்தையும் முன்னேற்றுவதன் மூலமாக இலங்கையின் கால்நடை தொழில் துறையை பேணுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.

Sunday, March 29, 2020

ஊடகவியலாளர்களை விட வேகமாய் செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களே. வேகத்தை விட விவேகம் முக்கியமானதாகும்.

ஊடகவியலாளர்களை விட வேகமாய் செயற்படும் சமூக ஊடக செயற்பாட்டாளர்களே. வேகத்தை விட விவேகம் முக்கியமானதாகும்.

 தகவல்களை வழங்கும் போது அது உறுதியானதா என்று உறுதிப்படுத்திய பின்னர் வழங்குவதே ஊடக தர்மம். ஆனால் ஒரு தகவல் வந்தவுடன் உண்மை நிலையை ஆராயாமல் இன்று பலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துவிடுகின்றனர். இதனால் கொரோனாவினை விட வேகமாக வதந்திகள் பரவுகின்றன.

அதேபோல் இனவாதத்தை, மதவாதத்தை தூண்டும் செய்திகளும் வேகமாய் பரவுகின்றதை அண்மைய காலமாக அவதானிக்கின்றோம். ஊடகம் என்பது ஒரு கலை . அதனை கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் செல்லும். ஆனால் சமூக ஊடகத்திற்கு அவ்வாறு இல்லை. நினைத்தவுடன் ஆரம்பிக்கலாம்.

நினைத்ததை பதிவேற்றலாம். ஆனால் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனவே நிதானமாய் செயற்பட்டு இப்போதுள்ள நிலைமை இனவாதமாக மாறாமல் சுமூகமான நிலையை எதிர்பார்த்து சமூக பொறுப்புடன் செயற்படுவோம்.

நன்றி
அஹமத் மனாஸ்

ஹட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஹட்டன் டிக்கோயாவில் போதகர் உட்பட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
===========================================
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று (28) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனை கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப்பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

" தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11 ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹட்டனுக்கு அழைத்து வந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

அதன்பின்னர் திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு 16, 17 ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளை பகுதி போதகர், தேவாலயம் வந்துள்ளார். அதன் பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பை பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

கல்முனை பிரதேச மக்களுக்கு அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை

கல்முனை பிரதேச மக்களுக்கு அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகேவினால் அறிவுரை
=================================
(சர்ஜுன் லாபீர்). ,யு.எல்.அலி. ஜமாயில்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சம்மந்தமாக கல்முனை மாநகர பிரதேசத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தக சங்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வு இன்று(29) மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே அவர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்மந்தமாக மக்களுக்கு பள்ளிவாசல்கள் ஊடாக தெளிவான முறையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் செல்வது,ஒன்று கூடுவது, ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், மக்களுக்கு முறையான ஒழுங்கு முறையில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் சம்மந்தமாகவும் தெளிவுபடுத்தினார்.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் , கல்முனை,சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள், மற்றும் பொலிஸ், இராணுவ பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும்,பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றிருந்தனர்.



கொரோனா சந்தேகத்தில் கடலுக்கு சென்ற மீனவரை மீண்டும் அழைத்து வந்த கடற்படை!

கொரோனா சந்தேகத்தில் கடலுக்கு சென்ற மீனவரை மீண்டும் அழைத்து வந்த கடற்படை!
=================================================

திருகோணமலை காவல்துறையினரால் அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்து கடலுக்கு சென்ற ஒரு மீனவரை கரைக்கு அழைத்து வர கடற்படை இன்று (2020 மார்ச் 29,) நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தனிமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நபர் திருகோணமலை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபின் ரகசியமாக மீண்டும் கரைக்குத் திரும்ப முயன்கிறார் என்று திருகோணமலை காவல்துறையினரால் கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான நபர் சென்ற படகை கண்டுபிடிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் பின் குறித்த நபர் பயணித்த படகு உட்பட மேலும் இரண்டு படகுகளை சந்தேகத்தின் பேரில் கடற்படை கைது செய்துள்ளதுடன் படகுகளில் பயணித்த 10 நபர்களையும் கண்டுபிடித்து திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனவே, இந்த 03 படகுகளையும் கடற்படை இன்று (29) அதிகாலை கரைக்கு கொண்டு வந்துள்ளது.

பின்னர், அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களின் படி கடற்படை மருத்துவர்கள், இந்த நபர்களுக்கு ஆரம்ப நோய் அறிகுறிகள் உள்ளதா என்று சோதித்தனர்.

அவர்களின் படகுகள் கடற்படையின் வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) பிரிவால் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. கடற்படையால் கொண்டுவந்த அனைவருமே தனிமைப்படுத்தலுக்காக சாம்பூர் கடல்படை முகாமில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

மட்டு. தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது

மட்டு. தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது
======================================

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்க அனுமதியில்லை

நிவாரணம் வழங்க அனுமதியில்லை
- ________________________

கொவிட் - 19 வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டோருக்கு வணக்கஸ்தல  நிருவாகிகளோ, அமைப்புக்களோ நேரடியாக நிவாரணம் வழங்க முடியாது GS ஊடாக DS அனுமதி பிரகாரமே வழங்க முடியும்
மீறி வழங்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இராணுவ கட்டளைத் தளபதி அறிவிப்பு

Saturday, March 28, 2020

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தர வேண்டாம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பட்டதாரி பயிலூனர்களாக தெரிவுசெய்யப்பட்ட எவரும் பிரதேச செயலகங்களுக்கு வருகை தர வேண்டாம்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் லத்தீப் தெரிவிப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(சர்ஜுன் லாபீர்),யு.எல்.அலி. ஜமாயில்
                                                                         நாட்டில் உள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் 3ம் கட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கள்கிழமை அம்பாறை மாவட்டத்தில் உள்ள எந்தவொரு பிரதேச செயலகங்களிலும் வருகை தர வேண்டாம் என்றும் அவர்கள் அனைவரும் தங்களின் கிராம சேவர்களிடம் வங்கி கணக்கு புத்தகத்தின் பிரதி,அடையாள அட்டை பிரதி,கல்விச் சான்றுதழ்களின் பிரதிகளை எடுத்து சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இது சம்மந்தமான அறிவுறுத்தல்கள் அனைத்தும் அந்தந்த பிரதேச செயாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது எனவும் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.அப்துல் லத்தீப் தெரிவித்தார். 

அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைப்பேசி இலக்கங்கள்

அத்தியாவசிய தேவைகளுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தொலைப்பேசி இலக்கங்கள்
=====================================

அத்தியாவசிய பொது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல், வழிநடத்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையம் அலரிமாளிகையில் நிறுவப்பட்டுள்ளது.

பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஜனாதிபதி செயலணியின் வழிநடத்தல் மத்திய நிலையத்தினை மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைப்பேசி இல :- 0114354854, 0114733600

நேரடி தொலைபேசி இல :- 0113456200, 0113456201, 0113456202, 0113456203, 0113456204

தொலைநகல் இல :- 0112333066, 0114354882

மின்னஞ்சல் - ptf@pmoffice.gov.lk. 

ஊடக நண்பர்களுக்காக

ஊடக நண்பர்களுக்காக

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.
============================================
இன்று (28) இரவு 8.00 மணியளவில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 110 இலிருந்து 113 ஆக அதிகரித்துள்ளது.

இன்றய நிலவர அறிக்கை 28.03.2020

இன்றய நிலவர அறிக்கை 28.03.2020

இன்றைய வீரகேசரி முதல் பக்கம் 28/03/2020

இன்றைய  வீரகேசரி  முதல் பக்கம் 28/03/2020

எஸ்.என்.ஹஸ்மி.

கல்முனையில் கொரோனாவை தடுப்பதற்கான செயலணியின் தீர்மானங்கள் தொடர்பில் முதல்வரின் அவசர அறிவித்தல்..!

கல்முனையில் கொரோனாவை தடுப்பதற்கான செயலணியின் தீர்மானங்கள் தொடர்பில் முதல்வரின் அவசர அறிவித்தல்..!
                                                                                             
( யு.எல்.அலி. ஜமாயில்   )                                                                                                  கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கூட்டுப்பொறுப்புடன் முன்னெடுத்து வருகின்ற கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய செயலணியின் மூன்றாவது ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை (2020-03-28) பிற்பகல் கல்முனை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின்போது கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுக்கும் நோக்கில், பொது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் பொருட்டு, அங்கு ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் வர்த்தகர்களினதும் பொது மக்களினதும் கவனத்திற்கு இத்தால் அறியத்தரப்படுகிறது.

* அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற வேளையில் பொதுச் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதுவும் திறக்கப்படக் கூடாது.

* இக்காலப்பகுதியில் பொது மக்கள் தமக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை தமது வீடுகளுக்கு முன்னால் வருகின்ற நடமாடும் விற்பனை வியாபாரிகளிடம் கொள்வனவு செய்தல் வேண்டும்.

* தமது வீதிகளுக்கு நடமாடும் விற்பனை வியாபாரிகள் வராத பட்சத்தில், அது குறித்து பிரதேச செயலகம் அல்லது கிராம சேவகருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினால், உரிய ஏற்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஆகையினால் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் வர்த்தகர்கள் எவரும் சந்தைகள், வர்த்தக நிலையங்கள், கடைகள் எதனையும் திறந்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.

* இவ்வுத்தரவை மீறும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இத்தால் அறியத் தரப்படுகிறது.

* அவ்வாறே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றபோது, அவசிய தேவையின்றி பொது மக்கள் எவரும் வீட்டில் இருந்து வெளியேறி, வீதிகளில் நடமாட வேண்டாம்.

* ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது எக்காரணம் கொண்டும் எவரும் வீட்டில் இருந்து வெளியேற வேண்டாம் என இத்தால் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

 * ஊரடங்கு உத்தரவை உதாசீனம் செய்து, வீதிகளில் நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் அவர்களை கைது செய்து, தடுத்து வைப்பதற்கும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இவ்வாறு தண்டிக்கப்படுவோரை விடுவிப்பதற்கு எம்மால் எவ்வித மனிதாபிமான உதவியும் வழங்கப்பட மாட்டாது.

* இக்காலப்பகுதியில் மரண சம்பவங்கள் நிகழ்ந்தால், மரண வீட்டிற்கு செல்வோர் அங்கு தரித்திருக்காமல், உடனடியாக தமது வீடுகளுக்கு திரும்பி விட வேண்டும் என்பதுடன் ஜனாஸா / பூதவுடல் நல்லடக்கத்தில் உறவினர்கள் உள்ளிட்ட 20  பேர் மாத்திரமே பங்குபற்ற வேண்டும்.

*  மறு அறிவித்தல் வரை திருமணங்கள் உள்ளிட்ட எந்த வைபவமும் நடத்தப்படக் கூடாது.

* அசாதாரண சூழ்நிலை காரணமாக வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக சேகரிக்கப்படுகின்ற நிவாரணங்களை தனி நபர்கள் அல்லது பள்ளிவாசல்கள், கோவில்கள், விகாரைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக விநியோகம் செய்ய முடியாது என அரசாங்கம் உத்தரவிட்டிருப்பதனால், அந்நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள பயனாளிகளின் பட்டியலை பொலிஸ் நிலையத்திடம் கையளித்து, அதற்கான பாஸ் அனுமதியை பெற்று, பொலிஸ் மற்றும் முப்படையினருடன் இணைந்தே அவை விநியோகம் செய்யப்பட வேண்டும்.

* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்திருப்போர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்பதுடன் அவ்வாறானோர் வெளியில் நடமாடினால் அவர்கள் குறித்து கிராம சேவகர் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகர் அல்லது பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு இத்தால் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

* நடமாடும் வியாபாரிகளுக்கு பாஸ் எனும் தற்காலிக அனுமதிப் பாத்திரம் வழங்கும் விடயத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றாக தடை செய்யப்பட்டு, பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து, பரிசீலனை செய்து, பொருத்தமானவர்களுக்கு மாத்திரம் அத்தகைய பாஸ் வழங்கப்படும்.

மேற்படி அறிவுறுத்தல்களை பொது மக்கள் முழுமையாக பின்பற்றுவதன் மூலம் எமது பகுதியில் கொடிய ஆட்கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை முற்றாக தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்கான செயலணியின் இன்றைய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக அமுல்படுத்தும் பொருட்டு, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக கல்முனை மாநகராட்சிக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள வணக்கஸ்தலங்களின் ஒலிபெருக்கி மூலம் மாநகர முதல்வர் அறிவித்தல் விடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக அதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வரின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.றிகாஸ், கல்முனை வடக்கு உப பிரதேச செயலாளர் அதியசயராஜ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன் ஆகியோருடன் முப்படைகளின் உயர் அதிகாரிகளும் மாநகர சபை உறுப்பினர்களும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கல்முனை வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முபாரக், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

@
Mayor's Media Division.

Covid19: சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியன் ஒதுக்கீடு

Covid19: சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியன் ஒதுக்கீடு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தொழில்களை இழந்த சாய்ந்தமருதிலுள்ள 2700 சமுர்த்தி குடும்பங்களுக்கு  'சஹனபியவர' வட்டியில்லாக் கடன் வழங்க சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ரூபா 25 மில்லியனை ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும்சமுர்த்திபெறும் புதியகுடுங்களுக்கும்,சமுர்த்தி பெறத் தகுதியான குடும்பங்களுக்கும் அவர்கள் அங்கத்துவம் வகிக்கும் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் ஊடாகவும் 1700 குடும்பங்களுக்கும் 8.5 மில்லியன் ரூபாய்யினையும் சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி ஒதுக்கீடு செய்துள்ளது.

இக்கடன்கள் யாவற்றையும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வழங்கி முடிக்க எதிர்பார்க்கின்றோம் இதன் பொருட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் IM.றிகாஸ் சேர் அவர்களின் வழிகாட்டலில் சிரேஷ்ட தலமைபப்பீட சமுர்த்தி முகாமையாளர் ARM.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலுடன் ஊடரடங்கு காலத்திலும் அர்ப்ணிப்புடன் செயற்படும் சக முகாமையாளர்கள் எமது பிரிவுக்குபொறுப்பான உத்தியோகத்தர்கள்,வங்கிப்பணிக்குழுவினர் மற்றும் சங்கத்தலைவர்கள் எனச் சகலரும் களத்தில் நின்று செயற்படுகின்றார்கள்.

மேலும் இன்று இரண்டாம் நாளாகவும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு கடன் வழங்கி வைக்கப்பட்டது.


கல்முனை மாநகர சபை எல்லைக்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்.

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம்.
======================================================================
-சர்ஜுன் லாபீர்-

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கூட்டம் இன்று(28) கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொடர்ந்தும் கல்முனை பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள்,மொத்த வியாபார நிலையங்கள்,கடைகள் அனைத்தும் மூடுவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்கள் அனைத்தும் நடமாடும் விற்பனை முகவர்கள் ஊடாக விநியோகம் செய்யப்படுவதனால் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரத்தில் தொடர்ந்தும் கடைகளை மூடுவதற்கு இக்கூடத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்கூட்டத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கு சுமார் 20ற்கு உட்பட்ட நபர்கள் கலந்து கொண்டால் போதுமானது என்றும் ,திருமணம் நடத்துவதை தற்காலிகமாக இக்காலகட்டத்தில் இடை நிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நடமாடும் வியாபாரங்கள் மேற்கொள்ளுவதற்கு பிரதேச செயலாளர், சுகாதார திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ்,இரானுவம்  ஆகியோரின் அனுமதியினை ஒன்றாக இணைந்து உத்தியோகபூர்வமாக பெற்று இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தல்களை மீறி வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டால் அவ் வர்த்தக நிலையங்களுக்குரிய வியாபார அனுமதி பத்திரத்தினை இரத்து செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், கல்முனை மாநகரத்திற்கு உட்பட பிரதேச செயலாளர்கள்,பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் மற்றும் பொலிஸ், முப்படைகளின் பிரதானிகளும் உயர் அதிகாரிகளும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.










Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...