Sunday, April 5, 2020

#கொரோனா_அற்ற_கல்முனை; கல்முனையில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்..!

#கொரோனா_அற்ற_கல்முனை;

கல்முனையில் நாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள்..!

நாளை திங்கட்கிழமை (06-04-2020) காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.00 மணி வரை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள நிலையில், இக்காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு, கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து இன்று ஞாயிற்றுக்கிழமை (05) மாநகர சபை மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.சுகுணன், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜீத் பெரேரா, கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி தர்மசேன, கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் என்.ஆரிப், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.றிஸ்பின், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜ்வத், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கணேஷ்வரன் ஆகியோருடன் நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு, பொது மக்கள் ஒன்றுகூடுவதை முடியுமானவரை கட்டுப்படுத்துவது குறித்தும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக அமுல்படுத்துவது தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்பட்டது.

* இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த முறை போன்று பொதுச் சந்தைகளில் மொத்த வியாபாரம் மாத்திரம் இடம்பெறுவதுடன் பொது மக்களுக்கான மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் வியாபார நடவடிக்கைகள்  விளையாட்டு மைதானங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

* சந்தைகளின் நுழைவாயில்களிலும் கடைகளின் முன்னாலும் கை கழுவுவதற்கான அல்லது கிருமி தொற்று நீக்கும் (Sanitize) ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

* மக்கள் மத்தியில் போதிய இடைவெளி பேணப்படுதல் வேண்டும் என்பதுடன் அனைவரும் மாஸ்க் அணிந்திருத்தல் அவசியம்.

* நுகர்வோர் மத்தியில் போதிய இடைவெளி இருப்பதை வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக உரிமையாளரினால் ஒரு பணியாளர் இக்கடமையில் அமர்த்தப்பட வேண்டும்.

* பொருள் கொள்வனவுக்காக சந்தை, கடைத்தெருக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒருவர் மாத்திரமே செல்ல வேண்டும்.

* சமீப காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து வந்தோர், சந்தைகள் மற்றும் கடைத் தெருக்களுக்கு செல்வதை முற்றாக தவிர்ந்து கொள்ள வேண்டும்.

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை மீறப்படக்கூடாது என்பதுடன் விலைப்பட்டியல் அவசியம் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

* மேற்படி ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக மாநகர சபை உத்தியோகத்தர்களுடன் பொலிஸ், இராணுவம், கடற்படை, விசேட அதிரடிப் படை மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.

* பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகளை மீறும் வியாபாரிகள் மீது அதே இடத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆகையினால், கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களும் பொது மக்களும் மேற்படி அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடித்து, கொரோனா வைரஸ் அற்ற மாநகராக தொடர்ந்தும் பாதுகாப்பாய் இருக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்.

-முதல்வர் ஊடகப் பிரிவு



Saturday, April 4, 2020

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நிர்ணய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அரசாங்க அதிபர்!

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் நிர்ணய விலையை மீறி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை- அரசாங்க அதிபர்!
---------------------------------------------------------------------------------------------------------

அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை  அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்   அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட செயலக  கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(4) நண்பகல் இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்டத்தின் புதிய மேலதிக அரசாங்க அதிபர்களாக வி.ஜெகதீஷன்  ஏ.எம்.அப்துல் லத்தீப்  ஆகியோர் உட்பட  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக  புலனாய்வு உத்தியோகத்த
ர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு விதித்த நிர்ணய விலை தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு  இம் மாவட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

மேலும்  பிரத்தியேகமாக அமைககப்பட்ட சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மரக்கறி வகைகள் மீன்வகைகள் உள்ளிட்டவைகளுக்கு இந்நிர்ணயவிலை ஒன்றினை தீர்மானிப்பதற்காக இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தவிர  இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை  சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலங்களாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சில வியாபாரிகள் எதுவித விலை நிர்ணயமும் இன்றி அதிகரித்த விலைகளுடன் நுகர்வோரை சிரமங்களுக்கு உள்ளாக்கி வருவதாக  பொது மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில அததியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும்  முகமாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாக உயர் அதிகாரி தெரிவித்தார்.

அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைவாக  மேற்படி  இந்நடவடிக்கைள் தேவையான   செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாக  மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தத்தமது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.

-பாரூக் ஷிஹான்-




நற்பிட்டிமுனை மேன்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி!!





நற்பிட்டிமுனை மேன்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி!!

நூருல் ஹுதா உமர்

நற்பிட்டிமுனை மேன்ஸ் (MANS) சமூக சேவைகள் அமைப்பின் அனர்த்த நிவாரண சேவைகள் செயலணி ஏற்பாடு செய்த தற்போதைய அசாதரண சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்த குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை (03) நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், நற்பிட்டிமுனை பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் ஜே.எம்.றிசான் (மௌலவி), நற்பிட்டிமுனை மேன்ஸ் ஸ்தாபக தலைவரும் தேசிய காங்கிரஸின் அமைப்பாளருமான சப்றோஸ் ஜமால், நற்பிட்டிமுனை மேன்ஸ் அமைப்பின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம்.நபார், செயலணித் தலைவர் ஜே.எம்.மிஹ்ளார்,   மற்றும் இராணுவத்தினர் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நிவாரண பொதிகளை வழங்கிவைத்தனர்.

கணவனை இழந்த தாய்மார்கள், அங்கவீனமுற்றோர்கள், முதியோர்கள் என பலருக்கும் இந்நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்னும் கட்டம் கட்டமாக 450 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்படவுளது என அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

Friday, April 3, 2020

முஸ்லிம் சகோதரனின் ஜனாஸா எரிக்கப்பட்டது வேதனையளிக்கிறது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி H.M.M ஹரீஸ் கவலை தெரிவிப்பு.

முஸ்லிம் சகோதரனின் ஜனாஸா எரிக்கப்பட்டது வேதனையளிக்கிறது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி H.M.M ஹரீஸ் கவலை தெரிவிப்பு.
########################################

கலிமா சொன்ன முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா என்பது இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடாகும். இந்த நிலையில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கியதாக கூறப்படுகின்ற முஸ்லிம் ஒருவரின் ஜனாஸா இன்று அதிகாலை எரிக்கப்பட்டமை முஸ்லிம்கள் மத்தியில் ஆழந்த துக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது:-

இத்தாலி, இங்கிலாந்து மற்றும் ஜரோப்பிய கிழக்கு நாடுகளில் கொரானா தொற்றுக்காரணமாக மரணித்தவர்களின் ஜனாஸா, தொழுகை நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மட்டுமின்றி முஸ்லிம் நாடுகளில்  பலவற்றிலும் இவ்வாறான இறப்புகள் சமீபத்திய நாட்களில் அதிகமாக சம்பவித்து வருகிறது. அந்த ஜனாஸாக்கள் இஸ்லாமிய சடங்குகள் செய்யப்பட்டு தொழுகையின் பின்னர் ஆழமான குழிகளில் நல்லடக்கம் செய்யப்படும் நிலை இருக்கின்ற போதும் சிறியளவிலான நாடான இங்கு மட்டும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருப்பது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை சட்டத்தின் படி ஒரு பிரஜைக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமையை  கூட மறுக்கின்ற இந்த கொடூரமான செயலானது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும்  அவமதித்த ஒரு செயலாகவே  கருதவேண்டி உள்ளது. முஸ்லிம்களின் ஜனாஸா விடயத்தில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்கவேண்டியது காலத்தின் அவசியம் ஆகும்.

நம்நாட்டில் நடந்து முடிந்த இந்த விடயம் முஸ்லிம் மக்களின் மனங்களில் பெரும் வருத்தத்தையும் கண்ணீர் சிந்தும் நிலையையும் ஏற்படுத்தி உள்ளது.
எனினும் யாராக இருந்தாலும் எமது இஸ்லாமிய மார்க்க கோட்பாட்டுகளுக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட அனுமதிக்க முடியாது. இவ்வாறான செயல்கள் உடன் களைந்தெறியும் வழிமுறைகளை நாம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியமானதாகும்.

முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா தகனம் செய்ய உள்ள செய்தியை நான் அறிந்தவுடன்  தொடர்ந்தும் அரச உயரதிகாரிகள் பலரையும் அழைத்திருந்தும் அந்த விடயம் வெற்றியளிக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. இது விடயம் தொடர்பில் அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளுடனும் கலந்துரையாடி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிகளை செய்து வருகிறேன்.

இதேவேளை, இவ்வாறான நிலை தொடருமானால் தொற்று ஏற்பட்டு தாம் மரணித்தால் தனது ஜனாஸா எரியூட்டப்பட்டுவிடும் என பயந்து கொரானா தொற்றுக்குள்ளாகும் மக்கள் தமது நோய் தொற்றை மறைக்கும் அபாய நிலை எமது நாட்டில் ஏற்படலாம்.  என்பதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நேற்று காலமான அந்த சகோதரனை இறைவன் பொருந்திக் கொண்டு உயரிய சுவர்க்கமான "ஜன்னத்துல் பிர்தௌஸ்" எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என இறைவனிடம் கையேந்தி பிராத்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயாளியின் ஜனாஸா எரிக்கப்பட்டமைக்கு ரவூப் ஹக்கீம் கண்டனம்

இலங்கையில் கொரோனா (COVID-19) தொற்று காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளர்.

அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

நீர்கொழும்பு, கொச்சிக்கடை பலகத்துறை பிரதேசத்தில் வசித்து வந்த முஹம்மத் ஜமால் COVID-19 தொற்று காரணமாக உயிரிழந்த பின்னர், இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு அமைவாக அவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட அனுமதிக்கப்படாமை துரதிர்ஷ்டவசமானதும் வருத்தத்தக்கதுமாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

குறுகிய நேரத்துக்குள் அரசாங்க மற்றும் மருத்துவ துறையினருடன் தொடர்புகொண்டு ஜனாஸா எரியூட்டப்படுவதை தடுப்பதற்கு அவசரம் அவசரமாக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பாரியளவில் வியாபித்து பரவிவரும் தொற்றுநோய் என்றாலும், சமய உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மேற்படி ஜனாஸா நல்லடக்கடம் செய்யப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தில் பதவிவகிக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் டொக்டர் சுஹைல் மற்றும் எமது கட்சியின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா போன்றோர் நடுநிசிவரை முயற்சித்துள்ளனர்.

நல்லடக்கம் செய்வதுபற்றி எடுத்துக்கூறப்பட்ட போதிலும், நீர்கொழும்பு பிரதேசத்தில் பத்து அடி ஆழத்தில் குழி தோண்ட வேண்டியுள்ளதால் அங்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருப்பதனால், தண்ணீர் கசிவு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து கொழும்பு, மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், மாவட்டத்துக்கு வெளியில் ஜனாஸாவை கொண்டு செல்வதற்கு சட்ட மருத்து அதிகாரியினால் அனுமதி வழங்கப்படவில்லை. மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட்டிருந்த நிலையில் நீதவானின் விசாரணைகூட ஒரு பொருட்டாக இருந்திருக்க மாட்டாது.

குடும்பத்தவர்களின் உணர்வுகளையும், வேண்டுகோளையும் கருத்திற்கொள்ளாது ஜனாஸாவை எரிப்பதில் அவசரம் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எமது நிலைப்பாட்டுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அறிகிறோம். சுகாதார சேவைகள்  பணிப்பாளர் நாயகத்துக்கும், சட்ட மருத்துவ அதிகாரிகளுக்கும் இடையில் இது சம்பந்தமான கூட்டத்தில் உரிய சுற்றறிக்கையை மீளாய்வு செய்வதுபற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் அறிகிறோம்.

எங்களது சமயரீதியான உரிமையை நாங்கள் வலியுறுத்தும் அதேவேளையில், தற்போதுள்ள அசாதாரண சுழ்நிலையில் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு நிலைமையை மேலும் சிக்கலாக்காமல், யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியமுள்ள தீர்க்கமான முடிவை மேற்கொள்ள  வேண்டியது அவசியமாகும்.

இதுதொடர்பில் “COVID-19 தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை அகற்றுதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்” என்ற தலைப்பிலான நீதியரசர் சலீம் மர்ஸுப் அவர்களின் ஆய்வறிக்கையை வாசித்தால் இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளின்போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து தெளிவாக புரிந்துகொள்ளலாம்.

Thursday, April 2, 2020

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் கிளினிக் நோயளிகளின் நலன் கருதிதொலைபேசி இலக்கங்ககள் அறிமுகம்

கல்முனை சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையினால் கிளினிக் நோயளிகளின் நலன் கருதிதொலைபேசி இலக்கங்ககள் அறிமுகம்

Wednesday, April 1, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று மட்டும் இதுவரை 195 பேர் கைது...!

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இன்று மட்டும் இதுவரை 195 பேர் கைது...!

- முஹம்மட் அப்லால் அபுல்லைஸ் -

இன்று மாத்திரம் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 195 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்...!

கொழும்பு பகுதியிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...!
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்துள்ளனர்...!

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வாகனங்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கும் வரை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்...!

Mihraj News 24/7

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக மருதமுனை முகம்மது அஸீம் நியமனம்..

(பி.எம்.எம்.ஏ.காதர்) மருதமுனை, பெரியநீலாவணை, அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முகம்மது அஸீம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செய...